மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமம் குடிமக்கள் இயக்க மாநில துணைச்செயலாளர் ரூபிணி சுந்தர் தலைமை வகித்தார்.
ஜனநாயக அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஞானசவுந்தரி, சமம் குடிமக்கள் இயக்க மாவட்ட தலைவர் வணங்காமுடி, திராவிடர் விடுதலைக் கழக மகளிர் அணி நிர்வாகி தீபா ஸ்ரீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலன்டீனா பேசுகையில், “பெண்கள் மீதான வன்கொடுமை சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. பல இடங்களில் புகார் கொடுக்கும் பெண்களுக்கு எதிராகவே நடவடிக்கைகள் இருக்கிறது. புகார் கொடுக்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு போதுமான நியாயம் வழங்கப்படுவதில்லை.
கந்து வட்டி கொடுமை அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மது பழக்கத்தினால் பெண்கள் விதவைகளாவது அதிகரிக்கிறது. எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.