X Close
X
8825830932

15 தினங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் - பெங்களூருரு புகழேந்தி-


87108-e7beae35-21cc
Salem:

நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து துண்டுப் பிரசுரம் விநியோகித்தற்காக தொடரப்பட்ட தேச விரோத குற்றச்சாட்டின் கீழ் கடந்த அக்டோபர் 1-ம் தேதி சேலத்தில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ., வெங்கடாசலம் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன், பெங்களூருரு புகழேந்தி உள்ளிட்ட 17 பேர் மீது அன்னதானப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ., வெங்கடாசலம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். முன்னாள் எம்எல்ஏ., எஸ்.கே.செல்வம் உள்ளிட்டோர் முன் ஜாமீன் பெற்றனர். டிடிவி தினகரன் ஆதரவாளரான கர்நாடகாவை சேர்ந்த புகழேந்தி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தார்.

அவர் இந்த வழக்கு தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: எம்எல்ஏ.,-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபீக்க உத்தரவு வரும். அதில் இந்த ஆட்சி கவிழும். 15 தினங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். இரட்டை இலை வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை நாங்கள் எதிர்க்க தேவையில்லை. அவரை அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடித்து விடுவார். மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு ஒரு சதவீதம் கூட நம்பிக்கை இல்லை. கர்நாடகாவில் நஞ்சன்கூடு, குண்டல்பேட்டை ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலின்போது ரூ.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதை விட குறைவாகவே ஆர்.கே.நகரில் பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால், அங்கு தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்துவிட்டது. ஆர்.கே.நகரில் மதுசூதனனை ஆதரித்து பாஜக அறிக்கை விடும் என்று எதிர்பார்க்கிறோம். அது வந்துவிட்டால் மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்துவிடும். ஜெயலலிதாவின் வாரிசு என்றுகூறிக் கொண்டு அவர் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவின் தங்கை என்றுகூறிக்கொண்டு ஷைலஜா என்பவர் மஞ்சுளா என்ற சிறுமியை அழைத்து வந்தார். இப்போது மஞ்சுளாவின் பெயரை அம்ருதா என்று மாற்றிவிட்டனர். அப்போதே ஜெயலலிதாவின் உறவினர் என்பதற்கு ஏதாவது ஆதாரம் கொடுங்கள் என்று கேட்டேன். ஆனால், 2 ஆண்டுகள் வரை தொடர்பில் இருந்த அவர்கள், எவ்வித ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. பணம் பறிக்கவும், ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்பதற்காக இதுபோன்ற கூட்டம் அலைகிறது. இவற்றை மக்கள் நம்ப மாட்டார்கள்.

டிடிவி அணியில் இருந்த எம்பி.,-க்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு டூர் போயிருக்கின்றனர். நவநீத கிருஷ்ணனுக்கு தெரியும் இங்கு ஒரு தனபால் இருப்பது போல, டெல்லியிலும் ஒரு தனபால் இருக்கலாம் என்று. எனவே, நாடாளுமன்றத்தில் ஏதாவது ஏற்படலாம் என்ற அச்சத்தில் அவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் திரும்ப வருவார்கள்.

இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் சேர்ந்தபோதே அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர். திராவிட இயக்கத்தை அவர்கள் அடகு வைத்துவிட்டனர். பெரியார், அண்ணா, எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த அதிமுக-வை இபிஎஸ்-ஓபிஎஸ் அடகு வைத்துவிட்டனர். அதை மீட்டெடுக்கவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். நாங்கள் அடிமைகள் இல்லை.

பாஜக-வினர் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இபிஎஸ்-ஓபிஎஸ் முயற்சிக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் அதிமுக-திமுக-வைத் தவிர டெல்லியில் இருந்து வேறு யாரும் வந்து ஆட்சி அமைத்துவிட முடியாது. எங்களுக்கு எதிரி திமுக தான். ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இரண்டாமிடத்தில் திமுக வரும். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் முன்னாள் எம்எல்ஏ.,-க்கள் எஸ்.கே.செல்வம், எஸ்.இ.வெங்கடாசலம் உள்ளிட்டோரும் நீதிமன்றம் வந்திருந்தனர்.

CFCM